நதியை போல் உன் வெற்றியை மாற்றிடு.
உந்தன் வெற்றியின் துவக்கம் காண அனைவரும் முனைந்திட வேண்டும், ஆனால் நதிமூலம் காணக்கிடைக்காது என்பது போல் அதைத் தேடி அவர்கள் தொலைந்திட வேண்டும்..
வழி எங்கும் உன் வெற்றியை அழித்திட முயல்வர்.. கதிரவன் ஒளி நதியை ஆவியாக்கினாலும் அது மீண்டும் மழையாகி நதியாகவே மாறிடும்.. அதுபோல் அவர்களின் முயற்சியை உன் மூலதனம் ஆக்கிடு..
உந்தன் வெற்றிகள் யாவும் பலருக்கு உதவிகளை அளித்திடும் வகையில் உழைத்திடு... கவலையின்றி ஓடும் நதியானது வழியெங்கும் அதன் நிலத்தினையும், வளத்தினையும் பலப்படுத்துவது போன்று நீ பெரும் வெற்றி பலரின் வாழ்வை உயர்த்துவதாக இருந்திட வேண்டும்..
வெற்றிகள் பல நேரம் தாமதிக்கப்படலாம்.. நதிகளின் ஓட்டத்தை அணையிட்டு தடுப்பது போல்... வெற்றிகான முயற்சிகளை அணையில் சேர்த்துவைத்த நீரைப் போல் பன்மடங்கு கூட்டிடு.. அணைகள் திறக்கப்பட்டதும் பாயும் வெள்ளம் போல் உன் நேரம் வரும்போது வெற்றிகளை அள்ளி குவித்திடு..
நீ சேர்த்த வெற்றிகள் கட்டுக்கடங்கா சமுத்திரமாக மாறும் வரை வெற்றிகளை நதியென எண்ணி ஓடிக்கொண்டிரு...
-- Deepakraj